அமுதசுரபி

'புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்!'- பாரதி

Tuesday, August 02, 2005

அமுதசுரபியின் ஓவியச் சிறப்பிதழ்



அமுதசுரபியின் ஓவியச் சிறப்பிதழ் வெளிவந்துவிட்டது. 82 வயது நிறைந்து, வலக் கை தடைப்பட்ட போதும் இடக் கையால் வரையும் கலைமாமணி கோபுலுவின் அட்டைப் படத்துடன், பல்வேறு கட்டுரைகள் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.

திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகைகளுக்கு ஓவியங்கள் வரைந்த / வரையும் இருபதுக்கும் மேற்பட்ட ஓவியக் கலைஞர்களைப் பற்றி எழுதியுள்ளார். 20 ஓவியர்களின் புகைப்படங்களோடு அதை வெளியிட்டுள்ளோம்.

கலை விமர்சகர் தேனுகாவின் நீண்ட நேர்காணல் இடம்பெற்றுள்ளது. புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்குப் படைப்புத் திறன் நின்றுவிடும் (Creative Menopausity) என்ற தலைப்பில், அவருக்குள் கலை, குடிகொண்ட விதம், நவீன ஓவியங்களின் அறிவியல்பூர்வ இலக்கணம், மரபு சார்ந்த கலைகளின் அழகியல், விருது பெறுவதில் உள்ள அரசியல், தந்திரங்கள், அவர் கலை விமர்சகர் என்ற அடையாளத்தை மறுப்பது.... எனப் பல கூறுகளை இந்த நேர்காணலில் வாசிக்கலாம்.

கவிஞர் எஸ். வைதீஸ்வரன், சிறந்த ஓவியரும் கூட. அவர், தன் ஓவியங்களில் தனக்குப் பிடித்த ஓவியங்கள் சிலவற்றைக் குறிப்புடன் அளித்துள்ளார்.

கலை இயக்குநர் டிராட்ஸ்கி மருது, தூரிகையின் வேகம் என்ற தலைப்பில் கணினி மென்பொருள்களைப் பயன்படுத்தி வரையத் தொடங்கியதும், ஓவியர்களுக்கு எவ்வளவு தூரம் வசதி ஏற்பட்டுள்ளது, நேரமும் உழைப்பும் மிச்சமாகின்றன, படைப்பு துல்லியம் பெறுகிறது என்று எழுதியுள்ளார்.

இம்மாதச் சித்திரசுரபியில் சென்னை ஓவியக் கல்லூரியின் சுடுமண் துறைத் தலைவராகப் பணியாற்றும் ஓவியர் சந்ருவின் படைப்புகள் அலங்கரிக்கின்றன.

டொரண்டோவில் ஜீவனுடன் இரண்டு நாட்கள் என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன், ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். கனடாவில் வசிக்கும் ஈழத்து ஓவியர் ஜீவனின் ஓவியங்கள் பற்றியும் ஒண்டேரியோ கலைக் கூடத்தில் ஆங்கிலேய சிற்பி ஹென்ரி மூரின் படைப்புகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பற்றியும் தனக்கே உரிய நடையில் விவரிக்கிறார்.

பவித்ரா சீனிவாசன், கார்ட்டூன் கலைஞர்கள், பாத்திரங்கள் பற்றி, அழகாக எழுதியுள்ளார்.

ஓவியர் என். சீனிவாசன், தேவை: நுண்கலைப் பல்கலைக்கழகம் என்ற தலைப்பில் உயர்கல்வியில் ஓவியம் தொடர்பாக என்னென்ன பாடங்களை எங்கெங்கு படிக்கலாம் என்று வழிகாட்டுகிறார்.

இவையன்றி, இம்மாத வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியிலும் கற்பகாம்பாள் கவிதைப் போட்டியிலும் வெற்றி பெற்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. மு.ஜனகவல்லி என்பவரின் ஆளவந்தார் என்ற வரலாற்றுச் சிறுகதையும் ஆர். வெங்கடேஷின் அலைவரிசை என்ற வாமன கதையும் வெளிவந்துள்ளன.

முகுந்த் நாகராஜன், மாத்தளை சோமு, பொன்.குமார் ஆகியோரின் கவிதைகளோடு என் சிறுவர் பாடலும் வெளிவந்துள்ளது. கவிதாயினி மதுமிதாவின் படைப்புகள் பற்றிய என் பார்வையை முன்வைத்துள்ளேன்.

இம்மாதத் தலையங்கம், ஆக்கிரமிக்கப்படும் நீர்நிலைகள் பற்றியும் அவற்றைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தைப் பற்றியும் பேசுகின்றது.

மேலும் பல சுவையான பகுதிகள், உங்கள் கவனத்தை ஈர்க்கக் காத்திருக்கின்றன.

1 Comments:

Blogger Desikan said...

தகவலுக்கு நன்றி.
தேசிகன்.

1:21 AM  

Post a Comment

<< Home