அமுதசுரபி

'புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்!'- பாரதி

Monday, September 05, 2005

அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி முடிவுகள்

அமுதசுரபியும் அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து

செப். 8 : தேவன் பிறந்த நாள்

அமுதசுரபியும் அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டியை அறிவித்தன. அதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான படைப்புகள் வந்து சேர்ந்தன. முதல்கட்டத் தேர்வுக்குப் பிறகு 12 கட்டுரைகள், இறுதிச் சுற்றில் இடம்பெற்றன. எழுத்தாளர்கள் பாக்கியம் ராமசாமி, சாருகேசி, அண்ணாகண்ணன், ஜே.எஸ்.ராகவன் ஆகியோர், நடுவர் குழுவில் இடம்பெற்றனர்.

12 கட்டுரைகளையும் நடுவர்கள் நால்வரும் ஊன்றிப் படித்தனர். நகைச்சுவை உணர்வு, நடை, கருத்து ஆகிய அம்சங்களில் ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியே மதிப்பெண் அளித்தனர். நால்வரும் கூடிக் கலந்தாலோசித்தனர். அமரர் தேவன் நினைவாக அறிவித்த போட்டி என்பதால் மிகச் சிறப்பான கட்டுரைகள் வரும்; இறுதிச் சுற்றில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்த நடுவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கட்டுரைகளின் தரம், பரிசளிப்பதற்கு ஏற்றதாக அமையவில்லை என்பதே நடுவர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

மூன்று பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருந்தோம். ஆனால், பரிசுக்கு உரியதாக எந்தக் கட்டுரையும் தேர்வுபெறவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். ஆயினும் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மூன்று கட்டுரைகளை, வெளியிடுவதற்கு மட்டும் தேர்வுசெய்துள்ளோம். நடுவர்கள் இட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரைகள், தேர்வுபெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் ரூ. 500 சன்மானம் பெறுகின்றன.

அமுதசுரபியில் வெளியிடத் தேர்வுபெற்றவை:

<ண்> மூக்குயிர்த் தோழன் - உ.இராஜாஜி, இடைக்காட்டூர்

<ண்> ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி - சித்ரா ரமேஷ், சிங்கப்பூர்

<ண்> நன்றியுள்ளது - நாயல்ல, மனிதன் - அமுதா நாகராஜன், செகந்திராபாத்

இவை, அடுத்த இதழிலிருந்து வெளியாகும். போட்டிக்கு வந்த கட்டுரைகள் பற்றிய நடுவர்களின் ஒட்டுமொத்த கருத்து அடுத்த பக்கத்தில் உள்ளது.

போட்டியில் வெற்றி பெறுவது, இரண்டாம் பட்சம்; கலந்துகொள்வதே பாராட்டத்தக்கது. அவ்வகையில் போட்டியில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட அனைவரையும் பாராட்டுகிறோம். தர மான நகைச்சுவைப் படைப்புகளுக்கு எழுத்தாளர்கள் முயலவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.



நடுவர்களின் கருத்து

நகமும், சதையும் போல கதையும், நகைச்சுவையுமாக வாழ்ந்து ஜொலித்தவர் தேவன். அவர் நினைவாக நடத்தப்பட்ட போட்டிக்கு வந்த கட்டுரைகள் அதிகம் சிரிக்க வைக்காமல் மிகவும் சிந்திக்கவைத்தன - அதாவது நடுவர்களை ஏன் சிரிக்க வைக்கவில்லை என்று.

காதல், வீரம், சோகம், பாசம், தியாகம் போன்ற ரசங்களைச் சமைப்பது அக்கலையில் பயின்றவர்களுக்கு எளிது. ஆனால் நகைச்சுவை ரசம் அப்படி அல்ல. தயாரிப்பவரைக் காலைவாரி விட்டு விடும். கண்குத்திப் பாம்பாக இல்லாவிட்டால் அடி பிடித்து விடும். கல்கியே 'நகைச்சுவையாக எழுதுவது கொட்டைப் பாக்கைப் பிழிந்து பாதாம்கீர் எடுப் பது போல!' என்று நீண்ட பெருமூச்சு விட்டுள்ளார்.

ஒரு நிகழ்ச்சி, பயணம், மாந்தரின் வித்தியாச குணாதிசயம், உரையாடல் போன்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதை நடந்தது நடந்த படியே எழுதி அதை நகைச்சுவை என்பது, ஒரு பாடலை கற்பனைச் சக்தியுடன் மெட்டமைத்து ராகம் போட்டு, தாளத்துடன் இணைந்து பாடா மல் அந்தக் கால மாணவன் பதிமூன்றாம் வாய்ப் பாட்டைத் திக்கித் திணறி ஒப்பிப்பதுபோல் சொல் வதற்குச் சமமாகும். நல்ல பாடலுக்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற ஒரு கட்டமைப்பு இருப்பது போல நகைச்சுவைக் கட்டுரைக்கும் ஒரு தொடக்கம், விரிவாக்கம், நல்ல முத்தாய்ப்பு என்று இருந்தால்தானே படிப்பவரால் சிரிக்க முடியும்?

பரிசீலனைக்கு வந்த கட்டுரைகள், நடுவர் களைத் திகைக்க வைத்தன. படைப்பாளிகள் நகைச்சுவை எழுத்தை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு விட்டார்களே என்று. பின் வரும் ஐந்து கருத்துகள் அவர்கள் எண்ணத்தில் மேலோங்கி நின்றன.

(1) நகைச்சுவைத் திலகங்களாகத் திகழ்ந்த எஸ்.வி.வி., கல்கி, தேவன், துமிலன், ஆர்.கே.நாரா யணன் போன்ற ஜாம்பவான்களின் எழுத்து களைக் கட்டுரையாளர்கள் ஊன்றிப் படித்து அவர்களின் உத்திகளை, அணுகுமுறைகளை ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளக்கூட அந்தப் பெரிய ஜாடிகளைத் திறக்கவில்லை.

(2) கதைக்கு மாத்திரமா கரு தேவை? கட்டுரைக்கும் தேவை. ஓர் உருவம் தேவை. கட்டு ரையைப் படிப்பவர்களுக்கு உணர்த்த ஒரு செய்தி தேவை. புனையப்பட்ட படைப்பில் சிரிக்க, ரசிக்க, சிந்திக்க அங்கங்கே சரிகைகளும், புட்டாக்களும் தேவை.

(3) துணுக்கு வேறு; நகைச்சுவை வேறு. இரண்டுக்கும் உள்ள பாகுபாட்டைப் பற்றிய அறிமுகம் தேவை. துணுக்கு ஒரு நொறுக்குத் தீனி. நகைச்சுவைக் கட்டுரை, இலை போட்டுப் பரிமாறப்படும் உணவு. உணவை விருந்தாக்க முயல்வது, அவ்வளவு எளிதான செயல் இல்லை.

(4) எழுதிய 23 ஆண்டுகளில் பிரமிக்கத் தக்க சாதனை புரிந்த தேவனின் நினைவாக நடத்தப்பட்ட போட்டியில் கலந்துகொள்ளக் காட்டிய ஆர்வத்தில் ஒரு பகுதியைக் கட்டுரைகளைப் படைக்கு முன்னால் தேவன் எழுதிய எழுத்துகளில் ஒன்று, இரண்டையாவது படித்து ரசித்து அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தன் எழுத்தும் அமைய வேண்டும் என்கிற மனப்பாங்குடன்
படைப்பாளிகள், கொடுக்கப் பட்ட போதிய அவகாசத்தில் தீவிர முயற்சி செய்யவில்லையா? அல்லது.... அல்லது....

(5) தமிழகத்தில் தண்ணீர் மாதிரி நகைச் சுவை எழுத்துக்கும் தட்டுப்பாடா?

தேவனைப் பற்றி...

தொகுப்பு : சாருகேசி


ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார். அல்லது "மிஸ்டர் ராஜாமணி' அவரைப் பிரசித்திப் படுத்திவிட்டான். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அக்கட்டு ரையைப் படித்தபோது, இருபது வயதிற்குள்ளே எண்பது வயதாய் விட்டது போல் பாவித்துக்கொண்டு, முதிர்ந்த ஞானம் பேசும் ஜனங்கள் மிகுந்த நமது நாட்டில், இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் இந்த ஆசாமி யார் என்று எண்ணி வியப்படைந்தேன். இவரோ இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்த போது, அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும், துக்கங்களையும் பற்றி மட்டு மல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர்தான் என்று "தேவன்' காட்டிக்கொண்டு வருகிறார். "எங்கள் ஊர் செய்திகள்' இதற்குச் சான்று கூறுகின்றன.

- கல்கி : "ஆனந்தவிகடன்' இதழ் 29.04.1934


அமரர் தேவனின் கதைகளை ஏறக்குறைய ஒன்று விடாமல் படித்தவன் நான். அவர் எழுதிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில், ஒரு தலைசிறந்த நகைச்சுவை எழுத்தா ளராக இருந்திருக்கிறார். அது மட்டு மல்லாமல், அவரது உரைநடையின் சரளமும், துடுக்கும் எதிர்பாராத புத்தகங்களிலிருந்து,

எதிர்பாராத வரிகளை தொடர் கதை அத்தியாயங்களில் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. தேவனை இப்போதைய வாசகர் உலகு சரிவர அறிந்திருக்காதது துர்பாக்கியமே. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடி யாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன். அவரை எங்களால் மறப்பது சாத்தியமில்லை.

ராஜத்தின் மனோரதம், சின்னக் கண்ணன் கட்டுரைகள் எல்லாம் இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்.

சுஜாதா, 23.5.79

தேவனின் பேனாவில் பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயிர் பெற்று சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண் டிருக்கையில் அவர்களைப் படைத்த பிரம்மன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகன்னாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டு, தமிழிலும் இப்படி புதுமைக் கருத்துகளுடன் எழுத முடியுமா என்று பாராட்டினார்கள்.

ஆனந்தவிகடன், 1957 மே இதழ்

தேவன் மறைந்தபோது நடந்த இரங்கல் கூட்டத்தில்....

தேவன் எழுத்து, கள்ளிச்சொட்டுப் பால் போன்றது.

- கல்கண்டு தமிழ்வாணன்

தம் சொல், எழுத்து எதனாலும் பிறர் மனத்திற்குத் துன்பம் புரிந்தவரன்று. ஹாஸ்யம் என்று பிறர் மனது நோக எழுதக்கூடாது என்று ஹாஸ்ய எழுத்தாளர்களுக்கு தேவன் முன்மாதிரியாக விளங்கினார். சொல், எழுத்து, நடத்தையில் உத்தமராக இருந்தவர் தேவன்.

- மீ.ப.சோமசுந்தரம் (சோமு)

தமிழுக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை வரக் காரணமான சிற்பிகளில் ஒருவர் தேவன். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு புதுமுறையில் இலக்கியங்களை அள்ளித் தந்தார். வாழ்க்கையை ஒட்டிய பல விஷயங்களை நன்கு உணர்ந்திருந் தார். எழுத்து ஆற்ற லில் மட்டுமின்றி, பண் பாட்டிலும் முதிர்ச்சி அடைந்தவர்.

- வாகீச கலாநிதி கி.வா.ஜ.

Saturday, August 20, 2005

வலைப் பதிவு தொடங்கிவிட்டார், மறவன்புலவு க. சச்சிதானந்தன்



சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர்; ஐ.நா.உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றியவர்; விலங்கியலிலும் தமிழிலும் முதுகலைப் பட்டதாரி;

தனித் தமிழில் எழுதும் வெகு சிலரில் ஒருவர்; பதிப்புத் தொழில் உலகம் என்ற மாத இதழைத் தொடங்கி நடத்துபவர்; www.tamilnool.com என்ற இணைய தளத்தில் 35 ஆயிரத்திற்கும் மேலான நூல்களைப் பட்டியல் இட்டு, மின் வணிகத்திற்கு வழிகோலியவர்;

ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்;

திறமை எங்கிருந்தாலும் ஏற்றுப் போற்றும் நல்ல மனிதர்; அமுதசுரபிக்குப் பல நல்ல படைப்புகளை வழங்கியவர்...... ஒரு வலைப் பதிவைத் தொடங்கிவிட்டார். http://sachithananthan.blogspot.com/ பல துறைகளில் ஆழ்ந்த பட்டறிவும் தொலைநோக்குச் சிந்தனையும் கொண்ட மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
- அண்ணாகண்ணன்

Sunday, August 14, 2005

சுதந்திர தின நல்வாழ்த்துகள்

இந்தியா, இன்று தன் 59ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. கடும் பாதுகாப்புக்கு இடையில் நாடெங்கிலும் கொடியேற்றங்களும் சுதந்திர தினப் பாடல்களும் கொடி குத்திக்கொண்ட மார்புகளும் காணக் கிடைக்கின்றன.

இதை முன்னிட்டுக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள்:

*நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம்
*பெருநகரங்களில் வெள்ளநீர் வடிகால் கட்டமைப்பு
*பூகம்ப முன்னெச்சரிகை ஆய்வு அமைப்பு
*2030 ஆம் ஆண்டுக்குள் எரிசக்தியில் தன்னிறைவு
*மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம்
*வேளாண் துறையில் சூரியசக்தி பயன்பாடு
*அணுமின் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க இலக்கு
*நகர திடக் கழிவுகளிலிருந்து மின்னுற்பத்தி திட்டம்
*மின்விநியோகத்தில் இழப்பைக் குறைப்பதன் மூலம் ரூ.70 ஆயிரம் கோடியை சேமிக்க இலக்கு
*தாவர எரிபொருள் உற்பத்தியை ஊக்குவிக்க ஆய்வு
*நிலத்தடி நீர் சேமிப்புத் திட்டத்துக்கு முக்கியத்துவம்
*கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்
(நன்றி : தினமணி)

இன்னும் பத்தே ஆண்டுகளில் வறுமையை நாட்டிலிருந்து ஒழிக்க முனைப்போடு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். இவை அனைத்திற்கும் நாம் அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும். எல்லாம் நல்லவண்ணம் நடைபெறட்டும். ததாஸ்து!

வாசகர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், விளம்பரதாரர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன், பொறுப்பாசிரியர்.

Tuesday, August 09, 2005

இன்றே கடைசி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்றே கடைசி நாள்.

இந்திய நேரப்படி இன்று இரவு 12 மணி வரை வரும் படைப்புகளைப் போட்டிக்குச் சேர்த்துக்கொள்வோம். எழுதலாமா, வேண்டாமா என மதில் மேல் பூனையாக இருப்போர், உடனே செயலில் இறங்குங்கள். முயற்சி திருவினையாக்கும்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

நாளை கடைசி நாள்.

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு நாளையே கடைசி நாள். இதுவரை அனுப்பாதவர்கள், உடன் எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

Monday, August 08, 2005

இன்னும் 2 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 2 நாள்களே பாக்கி. இதுவரை அனுப்பாதவர்கள், உடன் எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

Sunday, August 07, 2005

இன்னும் 3 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 3 நாள்களே பாக்கி. முந்துங்கள். உடன் எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

Saturday, August 06, 2005

இன்னும் 4 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 4 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்